நியூயார்க் நகரம் அமெரிக்காவில் (5)

0 மறுமொழிகள்

"நியூ யார்க் நகரம்" 


27ம் தேதி அக்தோபர் 2007அறையின் ஜன்னலோரோங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெண்மையாய் மாறிக்கொண்டிருந்தது. அந்த வெண்மையில் இதமான தென்றல் காற்றும், தென்றலோடு ஈரமும் கலந்து வீசியது. இரண்டு நாட்கள் தான் இருப்பதால் சீக்கிரமே சுற்றிப் பார்த்து வரவேண்டும் என்பதால் முகுந்தையும் அவசரமாய் எழுப்பி குளித்து முடித்து தயாராகி வெளியே வருகையில் தூரல் ஆரம்பமாயிருந்தது. இந்த தூரலில் எங்கே சுற்றிப் பார்ப்பது என்ற சந்தேகத்துடன் குடையொன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.


உணவுவிடுதியை விட்டு வெளியே 20 அடி தூரத்தில் நதி அழகு அற்புதமாய் காட்சியளித்தது. நதிக்கரையில் இருக்கும் நியூஜெர்ஸி நகரனி உயர்ந்த கட்டிடங்கள் வியப்பில் ஆழ்த்தின. மும்பை நகரின் நரிமன் பாய்ண்ட் இடத்தில் ஒரிடத்தில் நின்று கொண்டு மற்ற பகுதியில் ஓங்கி நிற்கும் கட்டிடங்களைப் போன்ற அமைப்புடன், ஆனால் கண்கொள்ளா காட்சியாக நியூயார்க் நகரம் அமைந்திருந்தது. அத்துடம் முகத்தில் அறைந்தாற் போல் அடிக்கும் பனிக்காற்றும் இதமாயிருந்தது.அதே இடத்தில் இரவினில் காணும் போதும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புகைப்படங்களில் காண்பதைப் போன்ற அழகை அள்ளித் தந்தது. கால் சக்கரம் கொண்டு நதியோர சாலைகளில் வித்தைக் காட்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் முயற்சியை விடாமல் திரும்ப திரும்ப வந்து முயற்சி செய்து கொண்டிருந்தனர்.


நதியோர அழகை ரசித்துவிட்டு ரயில் நிலையம் சென்றோம். நியூயார்க் நகரின் சுரங்க ரயில் நிலையம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஊரைக் குடைந்து, நீரைக் குடைந்து என ஒரு பெரிய நெட்வொர்க்காக பல கிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்து தரைக்கு கீழே மூன்று மாடிகளாக ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது. ஒரு நாள் பயணச் சீட்டாக 7$ கொடுத்து வாங்கிக் கொண்டு முதலில் நாங்கள் சென்றது காலச் சதுரம் (டைம்ஸ் ஸ்கொயர்).


காலச் சதுரம் நியூயார்க நகரின் இதயப் பகுதியாகவும், கவனிக்கப் பட வேண்டிய பகுதியாகவும் உள்ளது. உயரமான கட்டிடங்களையும், வண்ண வண்ண விளக்குகளையும், கண் கவரும் விளம்பரப் பலகைகளையும், நடந்து கொண்டே திரியும் ஜனங்களையும், ஆங்காங்கே கூடிக் குலாவிக்கொண்டிருக்கும் காதலர்களையும், அழ்கழகாய் அலைந்து திரியும் பெண்களையும் நாமும் பார்த்துக் கொண்டே நாமும் நடக்கலாம் போல் தான் இருந்தது.ஜீன்ஸில் வரும் "அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம்" என்னும் வரிகள்தான் (வலம் மட்டும்) ஞாபகம் வந்தது. நாஸ்டாக் கட்டிடத்தின் அருகிலும், ஆங்காங்கே நகர்ந்து கட்டிடங்களின் அருகிலும் நின்று தேவையான அளவு புகைப்படங்களை மாறி மாறி எடுத்துக் கொள்ள தவறவில்லை. காலச் சக்கரத்தில் சரவண பவன் உள்ளது என கேள்விப் பட்டு தேட ஆரம்பித்தால் ஒரு மணி நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த தெருவில் இருக்கிறது எனத் தேடி தேடி அலைந்து அலுத்து பின் வேறு இடத்தில் சாப்பிடலாம் என அடுத்து கிளம்பினோம்.


அடுத்ததாக கொலம்பஸ் சர்கிள் எனப்படும் இடத்திற்கு சென்றோம். நான்கு சாலைகளுக்கு மத்தியில் உள்ள உலக சிலையும் காவல் போல் நிற்கும் கட்டிடங்களும் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. தேவையான அளவு போட்டோ எடுத்து விட்டு பூங்காவிற்கு சென்றோம்.


பச்சை பசேலென்ற பூங்காகளில் சுற்றிலும் அமைந்துள்ள வண்ண வண்ணமாய் செழித்துக் குலுங்கும் மரங்களும், அரைக்கால் சட்டையுடம் நடைபயணம் மேற்கொள்ளும் பருவப் பெண்களும், முதியோர்களும், குட்டி தேவதைகளாய் ஓடித் திரியும் குழந்தைகளும் எங்களின் கண்களால் ரசிக்க்ப் படத் தவறவில்லை.
குதிரை வண்டிகளிலும், சாரட் வண்டிகளிலும், இரண்டு மூன்று சக்கர வாகனங்களில் வலம் வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளும் பூங்காக்களை ரசித்தபடி சென்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களையும், அவர்களின் ரசிப்புகளையும் கவனிக்கத் தவறவில்லை. ஆங்காங்கே கொஞ்சிக் கொண்டிருந்த காதலர்களின் பருவ விளையாட்டுக்களையும் எங்களின் கேமராக்கள் கவ்விக் கொண்டிருந்தன, கண்களோடு சேர்த்து. போகிற போக்கில் காதலிக்கு முத்தம் கொடுத்துச் செல்லும் காதலன், வெட்ட வெளியிலமைந்த புல் தரையில் கன்னியொருவளின் மேனியில் மேன்மையாய் விரலில் வீணை வாசித்துக் கொண்டிருந்த காதலன் என காட்சிகள் மெய்சிலிர்த்தன.அதிகமான புகைப்படங்களால் சக்தியை இழந்திருந்த கேமரா பாட்டரியைப் போன்று அலைந்து திரிந்ததில் எங்களின் சக்தியையும் இழந்திருந்தோம். ஆகையினால் போதுமென முடிவு செய்து உணவு விடுதிக்கு கிளம்பினோம் எண்ணற்ற காட்சிகளை கண்ணில் நிறுத்திய மனநிறைவுடன்.நியூ யார்க நகரின் இரவு வாழ்க்கை எப்படீ?


- சுற்றுவோம்.......

மறுமொழிகள்

0 comments to "நியூயார்க் நகரம் அமெரிக்காவில் (5)"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES