நான் அப்பவே ரொம்ப சுமார்ட் ........
சிறு வயதிலியே நான் ரொம்ப புத்திசாலியாக இருந்திருக்கிறேன் எனலாம். அதற்கு உதாரணமாக ஓர் நிகழ்வு நடந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் என்னுடன் படிக்கும் தோழன் ஒருவன் எனது வீட்டிற்கருகில் உள்ள மின்கம்பத்தின் அருகே எதையோ தேடிக் கொண்டிருந்தான். நான் என்ன என வினவிய போது ஏதோ மினுமினு என்று மின்னியதாக கூறினான். நானும் கூர்ந்து பார்த்த்தேன் எதுவும் தெரியவில்லை. யோசித்து விட்டு தேடும் இடத்திலிருந்து இரண்டு அடி பின் சென்று பார்த்தால் எங்கள் வீட்டு தங்க மூக்குத்தி கண்டுபிடித்தேன். வீட்டில் கொடுத்ததையும், நான் கண்டெடுத்த புத்திசாலித்தனத்தையும் அப்போது வியந்து பாராட்டியதாக ஞாபகமுண்டு.
அ.. ஆ..
எனது முதல் வகுப்பை எப்படி ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை, ஆனால் புளிய விதைகளை அடுக்கி அ, ஆ எழுதிய ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. ஆசிரியரின் முகங்கள் ஞாபகம் இல்லை. ஆனால் அ அம்மா, ஆ ஆடு சொல்லிக் கொடுத்தவைகள் ஞாபகம் இருக்கிறது. மூன்றாம் வகுப்பில் வந்த பாரதியின் பாடலை("ஜாதிகள் இல்லையடி பாப்பா") எழுதி ஆசிரியையிடம் காண்பித்ததாக ஞாபகம் உண்டு. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் நன்றாக படிக்கிறேன் என்ற நிலை அனைவரிடமும் இருந்தது, எனக்கும் தெரிந்தது.
'தபால் பை'
பள்ளி செல்லும் நாட்களில் 'தபால் பை' என்பது ஒரு பெரிய கனவு. தபால் பையா ? என்னவென்று யோசிக்கிறீர்களா ?. புத்தகங்களை மஞ்சள் பைகளிலும், யூரியா பைகளில் தான் எடுத்துச் செல்வது வழக்கம். அதற்கு மாற்றாக தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அஞ்சல் கொடுக்கும் த்பால்காரனின் மாதிரியான பைகள் தான் பிரபலமான ஒன்று. நன்றாக படித்தால் தான் தபால் பை என்று வீட்டில் சொல்லினார்கள். அதுபோலவே மூன்றாம் வகுப்பின் ஆரம்பத்தில் தபால் பை ஒன்றை வாங்கிக் கொடுத்து எங்களின் ஆசையையும் நிறைவேற்றினார்கள்.
எனது தந்தை மிகவும் கோபக்காரர், காஞ்சிபுரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு அவ்வப்போதுதான் தந்தை வீட்டிற்கு வருவார். சேட்டை செய்தால் அடி பின்னி எடுத்துவிடுவார். முரண்டு பிடித்த என் அக்காவின் முகத்தை வீட்டுச்சுவரில் சரசரவென தேய்த்து அடித்தது மட்டும் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. முன்னால் நின்று பேசுவதற்கே மிகவும் பயமாக இருக்கும். எதோ ஒரு சமயத்தில் நன்றாக படிக்கிறாயா ? என கேட்டிருக்கிறார். நான் நானும், இன்னொருவனும் நன்றாக படிக்கிறோம் என்று சொன்னேன். அவனைவிட நன்றாக படிக்கவேண்டும் என்று சொல்லியதாக ஞாபகம்.
செண்டிமெண்ட்
சிறுவயதில் பெற்றோர்கள் வெளியூருக்குச் செல்லும் போது குழந்தைகள் தானும் வருவேன் என்று அடம் பிடிப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை ஏமாற்ற காசுகளை கையில் திணித்து விட்டு செல்வது வழக்கம். எனது அம்மா ஊருக்குச் சென்றால் நானும் வருவேன் என அடம் பிடிப்பதில்லை. ஆதலால் கையில் காசுகளை திணித்துவிட்டு செல்வார்கள். ஆனால் எனது அண்ணன் ராமு காசு வேணாம், கூட வருவேன் என அடம் பிடிப்பதால் அவனை மட்டும் அழைத்துச் செல்வதுண்டு. அப்போதே லச்சுமணனுக்கு காசு கொடுத்தால் வீட்டிலே இருந்து கொள்வான் என முடிவெடுத்து வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வார்கள்.
எனக்கு அது அவசியமாகவும் படவில்லை. அதே போல பள்ளியில் சத்துணவாக பாயசமோ, முட்டையோ கொடுப்பார்கள் என நினைக்கிறேன். அதை முண்டிக்கொண்டு வாங்குகையில் ஏனைய சிறு குழந்தைகள் அழுதுகொண்டு இருக்கும். ஆனால் எனக்கு அழுகை வராது. ஏன் அழுகிறார்கள் என்றும் நினைத்துக் கொள்வேன். அட அழுதால்தான் முட்டை கொடுப்பார்கள் என எண்ணிக்கொண்ட்டு அழுவது போல் பாசாங்கு செய்ததாகவும் ஞாபகமுண்டு. ஆக அந்த சமயத்திலேயே 'செண்டிமெண்ட்' எனப்படுவை எனக்கு குறைவு என்பதை இது காட்டுகிறது.
ஆட்டம்
எங்களின் கடைகளில் இருந்து பனியாரம் வாங்கி சாப்பிட்டது, அத்தை கடையில் இனிப்பு, பருப்வு வடைகள் சாப்பிட்டது, அப்பத்தா வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள் என அரைகுறை ஞாபகங்கள் சில வந்துபோவதுண்டு. மதுரைபக்கங்களில் தோட்டங்களையும், வயல்களையும் காடு என அழைப்பதுண்டு. காட்டிக்கு போயிட்டு வருகிறேன் என்றால் தோட்டத்திற்கு போய் வருகிறேன் என்பதே அர்த்தம். எங்களின் தோட்டங்களில் சுற்றித் திரிந்தது, பெரிய வெங்காயம் சாகுபடி செய்தது, நெல் பருத்தி விளைச்சல் செய்ததும் ஞாபகம் இருக்கிறது. செலவுக்கு காசு வேண்டும் என்றால அம்மா, அப்பாவிடம் கேட்கத் தேவையில்லை. காட்டிற்கு சென்று பருத்தியை எடுத்து டவுசர்(கால்ச் சட்டை) பைக்குள் போதுமென்ற அளவுக்கு திணித்துவிட்டு கடைகளில் கொடுத்து நமக்குத் தேவையான தின்பண்டங்களை வாங்கும் பண்டமாற்று முறை பண்ணியிருக்கிறோம். இதை திருட்டு என்றே சொல்லலாம்.
ஆனால் நம்ம காடுதான் என்பதால் திருட்டு இல்லை என்றும் சொல்லலாம். எப்படீ?
எங்கள் ஊர் கண்மாய்களில் ஆட்டம் போட்டிருக்கிறோம். கண்மாய் நீரில் கற்களை எரிந்து தவளை விடுவது ஒரு பொழுதுபோக்கு. பின் ஊரில் உள்ள சிறுவர்களுடன் நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி, அது இதுவென ஆடி இருக்கிறோம். அந்நாட்களில் குதிர்வல்லி என்னும் தானியம் தான் பெரும்பான்மையான வீடுகளின் சோறாக தாயாரகும். கடுகு போன்றும் வெள்ளை நிறத்துடனும் இருக்கும் குதிர்வல்லிச் சோறும், சோளக் கூழ், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவைகளை நாங்கள் சாப்பிட்டுவோம். ஆனால் எனக்கும் எதுவுமே பிடிக்காது. ஆகையால் எனக்காக மட்டும் சித்தப்பா, அததை வீடுகளில் இருந்து சுடு சோறு வாங்கி சாப்பிடுவேன் என நினைக்கிறேன். ஆனால் எல்லா நாட்களும் கிடைத்ததா? என ஞாபகம் இல்லை. எங்கள் ஊர்களில் குதிர்வல்லி இன்றும் பயிரடப்பட்டு சில குடும்பங்களில் பயன்படுத்துகிறார்கள் பழமை மாறாமல்.
சைக்கிளை மதில் அமுக்கியிருச்சு.....
எனது சித்தப்பாவின் மகளும் அக்காவுமானவருக்கு சைக்கிள் என்பது பட்டப்பெயர். ஒருமுறை ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் போது தளர்ந்த நிலையில் உள்ள மண் மதில்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அதனைப் பார்த்த சிறுவர்கள் அனைவரும் 'சைக்கிளை மதில் அமுக்கியிருச்சு' என் கூவியதைக் கேட்டு சைக்கிள் தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு, பின் விவரம் தெரிந்து அவரை காப்பாற்றினார்கள். தலையில் சிறு காயத்துடன் மருத்துவமனை சிகிச்சை பெற்றார் அவர். அந்த நிகழ்ச்சி இன்றும் ஞாபகம் உள்ளது.
- சொல்வோம்ல....
பள்ளிப் பருவம் - நினைவலைகள் - (2)
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
0 comments to "பள்ளிப் பருவம் - நினைவலைகள் - (2)"
Post a Comment