பிறப்பும் வளர்ப்பும் - நினைவலைகள் (1)

0 மறுமொழிகள்

வணக்கம் நண்பர்களே !





நொடி நொடிகளாய் நகரும் வாழ்க்கையில் நமது நினைவில் நிற்பவைகள் என்ன? இந்த வாழ்க்கையில் எப்போதுமே அனைத்துமே நினைவில் நிற்பது இல்லை. ஆனால் ஒரு சில விஷயங்கள் நம் நினைவில் நிற்பது உண்டு. அது மாதிரியான சுவாரஸ்யாமான விஷயங்களை பட்டியல் போடவே இந்த பக்கங்கள்.




வரலாறு :
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் இருந்த வேலு என்பவருக்கு மூத்த மகனாப் பிறந்த சங்கர்ராமு என்பவருக்கும், காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் பத்தாவது மகளாக பிறந்த பாக்கியம் என்பவருக்கும் 1970-ல் மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் திருமணம் நடந்தது.

இத் தம்பதியருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அதில் ஆறாவதாய் பிறந்த ஆண் மகனுக்கு லச்சு என்று பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே பின்னால் அழகாக 'விஜயலட்சுமணன்' என அழைத்தனர். ( ஒரு வழியா யாருன்னு தெரிஞ்சு போச்சா ?........... )

எனது தந்தை முதல் பிள்ளையாக இருந்ததனால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார் என்று சொல்வார்கள். அதாவது குதிர்வல்லி சோறும், கம்மங்கூலும், சோளக்கூலும் சாப்பிடுகின்ற அந்தக் காலத்திலேயே எங்கள் அப்பாவுக்கு எப்போதுமே சுடு சோறு தான் தயார் பண்ணுவார்களாம். இட்லி, தோசையெல்லாம் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் பண்ணுகிற நேரத்தில் எனது தந்தைக்கு காலையில் இட்லி தோசைதான் சாப்பிடுவார். அந்தப் பழக்கம் அவரின் கிட்டத்தட்ட ஐம்பது வயது வரைக்கும் தொடர்ந்தது. சிறு வயதில் இருந்தே மிகவும் வேகமாக நடப்பார். எங்கே போவது என்றாலும் நடந்தே தான் செல்வது அவரது வழக்கம். அதானாலேயே மிதிவண்டி ஓட்டுவதற்கு கூட அவர் கற்றுக் கொள்ளவில்லை.

இத்தம்பதியருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முதலாவது ஆண் குழந்தை பின் வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள், ஒரே ஒரு ஆண் என வருத்தப்பட்டிருக்கக் கூடும், அதனாலேயே பின் இரட்டையாய் ஆண் குழந்தைகள் பிறந்தது. அக்குழந்தைகளுக்கு இராமர், லட்சுமணன் என்னும் வழக்கமாக இரட்டையர்களுக்கு வழங்கப்படும் பெயர்களையே வைத்தார்கள்.

பிறப்பு

அக்குழந்தைகள் 1981 ம் வருடம் கார்த்திகை மாதம் 10 ம் தேதி திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகப்பிரவசம் அடைந்து சுகமாய் இவ்வுலகை அடந்தோம். இரட்டைச் சகோதரர்களில் நான் தான் தம்பி. நான் சிறு வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்து இருக்கிறேன். அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் செம கெட்டியாம். ஒவ்வோரு முறையும் இரண்டு புட்டி பால் குடிப்பது வழக்கம். பொறுமையும் கிடையாது என்பார்கள், அதாவது ஒரு பாட்டில் பால் முடிந்து, அடுத்து பாட்டில் ஊற்றி கொடுப்பதற்குள் அலறல் அழுகை ஆரம்பமாகிவிடும். எங்களின் இருவருக்கும் அமுல் பாட்டில் வாங்கியே எங்களின் வசதி குறைந்து போய்விட்டது என சொல்வார்கள்.

தொட்டிலில் தூங்கும் போது, ஒரு சாய்வாய் படுக்கும் சமயத்தில் எனது காதுகள் ஒட்டிக் கொள்ளுமாம். சிறுவயதில் தொட்டிலில் தூங்கும் போது என் காதுகள் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இதனால் வீட்டில் பயந்து போய் இருக்கிறார்கள். எங்கே என் காதுகள் ஒட்டிப் போய் விடுமோ என்று. அவ்வப்போது தொட்டிலிக்கு வந்து காதுகளை சரிசெய்து விடுவார்கள்.

நாங்கள் அப்போது எங்கள் ஊரில் கடை வைத்திருந்தோம். ஏறகன்வே இருக்கும் நான்கு குழந்தைகளுடன் கடையை பார்த்துக் கொள்ளும் தாய் தந்தையருக்கு உதவியாய் இருந்தது எங்கள் ஊரில் இருக்கும் பக்கத்து வீட்டு உற்றார்கள் தான். கடைக்கு வருகிறவர்கள் அப்படியே எங்களையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டு விடுவார்களாம். இரட்டைக் குழந்தைகள் அல்லவா, அதனால் இருவரையும் பார்க்க கொள்ளை அழ்காய் இருந்திருப்போம் என்றே நினைக்கிறேன்.( கருப்பு தான் இருந்தாலும் அதுதானே அழகு ! )



குழந்தை காணவில்லை.
கடையில் இருந்த என் அம்மா என்னை ஒரு மூலையில் தூங்கப் போட்டு விட்டார். தூங்கப் போட்ட என்னை, யாரவது வீட்டில் தூக்கிப் போயிருப்பார்கள் என்னும் எண்ணத்துடன் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். ஊர் முழுக்க தேடி அலைந்து இருக்கிறார்கள். அதுவரைக்கும் நான் நிம்மதியாக தூங்கி இருக்கிறேன். அவ்வளவு நேரம் வரை அழக்கூட இல்லை போலும். ஏறக்குறைய நாலைந்து மணி நேரம் கழித்து கடையை திறந்து பார்த்தால் க்டையில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை அவ்வப்போது என் தாயும் உற்றார்களும் நினைவுப் படுத்தி மகிழ்வதுண்டு.

'எம்.ஜி.ஆர் இறந்துதான் எங்கள் ஊரில் தான்'
அன்றொரு நாள். என்னுடைய ஆறாவது வயதில் எங்கள் ஊரில் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார், அவரை எங்கள் தெருவில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். நம்ப முடிகிறதா உங்களால்? ஆம் எனக்கு ஒரு 10 வயது ஆகும் வரை அப்படி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அதற்கு பின் தான் தெரிந்தது அது எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பொம்மை என்பது. என்னைப் பற்றி எனக்கே எனக்கு இந்த நிகழ்வுகள் தான் ஞாபகம் இருக்கிறது.

அடுத்த்தாக 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலுக்கு மாட்டு வண்டியில் சென்று இருக்கிறோம். அப்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு தாத்தாவின் தோளில் சவாரி செய்தது என்னால் மறக்கவே முடியாதவை. பின் மதுரையில் பேருந்திலோ, காரிலே செல்லும் போது இருக்கையில் நின்று கொண்டு மதுரையில் உள்ள ஒரிரு இடங்களை சுற்றிப் பார்த்ததாகவும் ஞாபகம் இருக்கின்றது. பின்னொரு நாளில் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் இருக்கும் அண்ணனைப் பார்ப்பதற்காக பாலத்தின் நடைபாதைகளில் நடந்து சென்றது மட்டுமே ஞாபகமிருக்கிறது.



- வரும்......

மறுமொழிகள்

0 comments to "பிறப்பும் வளர்ப்பும் - நினைவலைகள் (1)"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES