26ம் தேதி அக்டோபர் 2007
பல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள் யாரும் நியூயார்க் வரத் தயாராக இல்லை. ஆதலால் தனியாகவே சென்று வரத் தீர்மானித்தேன். நியூயார்க் செல்வத்ற்கான வழித்த்தடங்களை ஆராய்ந்த போது ரயில் பயண செலவு, நேரம் ஆகாய பயணத்தைவிட குறைவாகவே இருந்தது பயண செலவும், நேரமும். ஆதலால் இணையத்தின் மூலம் விலை குறைவாக கிடைத்த ஸ்பிரிட் விமானத்தில் 10 நாட்களுக்கு முன்பாக 200$ க்கு முன்பதிவு செய்தேன்.
நான் தங்கும் இடத்திலிருந்து விமான நிலையம் சென்று வர Indian Trail பேருந்திலும் செல்ல 20$க்கு முன்பதிவு செய்தேன். அக்டோபர் மாதம் 26ம் தேதி தேவையான துணிமணிகளுடன் பேருந்தில் அமர்ந்து விமானநிலையம் 4 மணிக்கு வந்து சேர்ந்தேன். மாலை 5 30 க்கு பயணமாகிய வேண்டிய விமானம் 2 மணி நேரம் என தாமதம் என அறிவுப்பு வந்து சரியாக மாலை 7 30 விமானம் டெட்ராய்ட் நகரை விட்டு நியூயார்க் நகருக்கு பறக்க ஆரம்பித்தது. கருமேகங்கள் வானில் சூழ்ந்து தூரல் ஆரம்பித்திருந்தன். அத்துடன் இடி, மின்னலும் சேர்ந்து வானில் மிரட்டியது. இடி மின்னலுக்கும் இருட்டுக்கும் இடையில் வானில் பறந்த விமானம் தள்ளாடியபடியே பறந்தது. எனக்கோ மனதுக்குள் பயம் பிடித்துக் கொண்டது. தெரியாது ஒரு நாட்டில் தனியாக விமானப் பயணம் சிறிது நடுக்கத்தையே வரவழைத்தது. நியூயார்க் பார்க்க வேண்டும் என விரும்பி தேவையில்லாம் மாட்டிக் கொண்டோமோ என்ற எண்ணமும் தோன்றியது. மொத்தமாக பயணம் செய்த சில மாணவர்கள் விமானத்தின் ஆட்டத்தை ரசித்தபடி கூச்சலிட்டுக் கொண்டே வந்தனர். அந்த தைரியத்தையும் நம்பிக்கையையும் என்னுள் சிறிது வரவழைத்துக் கொண்டே பயணம் செய்தேன். எதுவும் விபரீதம் நிகழக்கூடாது என என் மனம் வேண்டிக் கொண்டது. ஒரு 50$ அதிகமாக உள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் லேயே முன்பதிவு செய்து இருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றியது. ஆக ஒரு வழியாய் இரண்டு மணி நேர பயணத்தில் நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
இரவு நேர நியூயார்க் நகரத்தை புகைப்படத்தில் பார்த்து ஆச்சரியப்பட்டு, ஆயிரம் அடிகளுக்கு மேலிருந்து வண்ண விளக்குகளால் உயரமான கட்டிடங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நகரத்தை காண இருக்கையின் நுனியில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன் விமானம் தரையிறங்கும் நேரத்தில். ஆனால் நியூயார்க் நகரத்தில் மழை பொழிந்து கொண்டிருந்ததால் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றி பெரும் ஏமாற்றத்தைத் தான் கொடுத்தது. எதோ பெங்களுர் கலாசிபாளையத்தில் இறங்கிய மாதிரியான தோற்றத்தைக் கொடுத்தது. நியூயார்க் வந்திறங்கும் போது மணி இரவு 9 30 ஆகியிருந்தது.
அலுவலகத்தோழன் முகுந்த் நியு யார்க்குக்கு புதிது என்பதால் என்னை கூட்டிக்கொண்டு வரவேண்டாம் என சொல்லி விட்டேன். அந்நேரத்தில் வாடகைக்கார் அமைத்து செல்லும் நம்பிக்கையும் மற்றும் 70$ செலவழித்துச் செல்லவும் மனம் இல்லை. ஆதலால் முன்பே கூகிளில் பார்த்து வைத்திருந்த வரைபடம் கொண்டு பேருந்தின் (2$) மூலம் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். பின் ரயில் நிலையத்திலிருந்து நான் செல்ல வேண்டிய சாம்பர்ஸ் தெருவுக்கு பயணச்சீட்டு(5$) வாங்கி அமர்ந்தேன். 70$ க்குப் பதிலாக 7$ தான் செலவாயிற்று என்பது முக்கியமான விஷயம்.
இரவு நேரம் 10 மணி ஆகியிருந்ததால் கூட்டம் சற்று குறைவாகத் தானிருந்தது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் மக்கள் இறங்க இரண்டு மூன்று ஆட்களே இருந்தனர்.
ஆங்கில படங்களில் வரும் ரயில் கொலை, கொள்ளை ஞாபகங்கள் வேறு வந்து மனதில் புளியைக் கரைத்தது. ஒரு மணி நேரத்தில் இரவு 11 மணி வாக்கில் சாம்பர்ஸ் ஸ்டிரீட் இறங்கி வரைபடம் கொண்டும், விசாரித்துக் கொண்டும் சென்று நண்பன் தங்கியிருக்கும் ஹோட்டலை அடைந்து வரவேற்பறையில் விசாரித்தால் முகுந்த் என்ற பெயரில் யாருமே இல்லை என்றார்கள். ஆஹா என்னடா இது வம்பா இருக்கே ! முகவரி எல்லாம் சரியாக இருக்கிறது, ஆள் இல்லையே என புளி வயிற்றில் மேலும் கரையத்தான் செய்தது.
என்னிடமும் அலைபேசி இல்லை, அவனிடமும் இல்லை. அவனில்லையென்றால் 11 30 மணிக்கு மேல் யாரைத் தேடுவது, எங்கே தங்குவது என நினைக்கையில்......அதுவும் நியூயார்க்கில். சற்றே சுதாரித்து மடிக்கணிணியை திறந்து முகவரியை சரியாக நோக்கும் போது அறைஎண் இருந்தது. குறிப்பிட்ட அறையெண்ணுக்குச் சென்றால் நண்பன் அப்போதுதான் வந்திருந்தானாம். அப்பாடா சாமி என்ற் ஆத்ம சந்தோசத்துடன் இரவுநேர உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் அளவளாவி விட்டு படுக்கையில் சாய்ந்தேன். நினைக்கவே பிரம்மிப்பாய் இருந்தது. அமெரிக்காவின் முக்கிய நகரமும், உலகத்தின் முக்கிய விலை உயர்ந்த நகரமான நியூயார்க்கில் ஓர் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறேன் என்று.
இரண்டு நாட்கள் எங்கே சுற்றினேன், என்ன பார்த்தேன் ?
நியூயார்க் பயணம் - அமெரிக்காவில் (4)
- சுற்றுவோம்....
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
0 comments to "நியூயார்க் பயணம் - அமெரிக்காவில் (4)"
Post a Comment