அக்தோபர் மாதம் 28ம் தேதி 2007
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்..... அறையின் சன்னலை திறந்து வைத்தால் மேலெழும்பி நிற்கும் கட்டிடங்களும் வண்ண விளக்குகளுமாய் குழுமியிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து சுற்ற ஆரம்பித்தால் தான் பெரும்பாலான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதால் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து தயாராகி விட்டேன். முகுந்து சுற்றிப் பார்க்க வர மறுத்ததால் இரவே அருகிலுள்ள அறையிலுள்ள சுவாமியை அழைத்தாகி விட்டது. காலையில் 9 மணிக்கெல்லாம் தயாராகி விட பணித்தும் ஆகிவிட்டது.
நான் அடித்து பிடித்து காலையிலேயே தயாராகி இருக்க அவனோ அப்போது தான் எழுந்திருந்தான். எனக்கோ இருக்கிற ஒரு நாளில் நன்றாக சுற்றிப் பார்த்தாகி விட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு வேறு. என்ன பண்ணுவது வேகமாக செல்லலாம் என வலியுறுத்தி 10 மணிக்கெல்லாம் அறையை விட்டு வெளியே வந்திருந்தோம்.
அடிவயிற்றில் பசி குடலைப் பிடுங்கியது. நம்மூராக இருந்திருந்தால் எதாவதொரு கடையில் போய் இட்லியோ, தோசையோ விழுங்கிவிட்டு விறுவிறு வென நடக்கலாம். அங்கே எங்கே போய் சாப்பிடுவது என்ன சாப்பிடுவது என்ற பெரும் குழப்பங்களுக்கிடையில் அருகிலுள்ள கடையில் இரண்டு பன்னுகளை வாங்கி சாப்பிட்டோம். நம்மூரில் கிடைக்கும் பன் என்று ஆசையாக சாப்பிட ஆரம்பித்தால் அதில் ஏதோவொரு மணம் உவ்வே என வைக்கிறது. இருந்தாலும் என்ன செய்ய ? என்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் தான் சுதந்திரதேவி சிலைக்குச் செல்ல வேண்டிய இடம் இருப்பதால் கால்நடையாகவே நடந்து செல்ல ஆரம்பித்தோம்.
இனிமையான தென்றல் காற்று எங்களின் முகத்தில் ஈரக்காற்றை அறையத் தவறவில்லை.. அக்குளிர் காற்றிலிருந்து என்னைக் காக்க ஜெர்கின் ஒன்றை அணிந்திருந்ததால் ஒரளவு உடல் வெதுவெதுப்பாய் இருந்தது. போகின்ற வழியில் தீவிரவாதிகளால் வானூர்தி விட்டு தாக்கப்பட்டு தரைமயமாக்கப்பட்ட "Ground Zero" என தற்போது அழைக்கப்படும் உலக வர்த்தக கட்டிடத்தின் கட்டிடப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன் சிதைந்து போன சிமெண்ட் துகள்களுக்குள் சிதறி விழுந்த மனித உயிர்கள் மாண்ட இடங்கள் கண்டேன். பிரம்மாண்டமாய் காட்சி தரும் அம்மாதிரியான இடங்களில் 110 மாடி கட்டிடம் தரைமட்டமாயிருந்தால் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் உணர முடிந்தது. அப்பணி நடக்கும் இடங்களிலும் ஆங்காங்கே சுற்றுலாத்தளம் போல் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செல்கின்ற வழியில் ஆங்காங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தவறவில்லை. நானும் சுவாமியும் மாற்றி மாற்றி வெவ்வேறு விதமான கோணங்களில் எடுத்துக் கொள்ள தவறவில்லை. உலக வர்த்தகக் கட்டிடத்தின் முன்பாக இருந்த ஒரு இடத்தில் அமைந்துள்ள குட்டிச் சுவற்றில் சைக்கிள் ஓட்டி சாகசம் புரிந்த்தைப் பார்க்க பரவசாமாயிருந்தது. அதன் அருகிலேயே ஒர் மனித சிலை உட்கார்ந்த நிலையில் பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டிருந்தது. அதனருகில் உட்கார்ந்தும் போட்டோ எடுத்துக் கொண்டோம்.
சிறிது தொலைவில் உலக பொருளாதரத்தின் சிம்மாசனமாக விளங்கும் வால் ஸ்டிரீட் சென்றோம். பெரும் பண முதலைகளும், முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் குவிந்திருக்கும் அவ்விடம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் அமைதியாயிருந்தது. ஆள்நடமாட்டமும் மிகவும் குறைவாகியிருந்தது. வால் ஸ்டிரீட்டைக் கடந்து சென்றால் பெரும் கூட்டம் ஒன்று வரிசையில் காத்துக் கொண்டிருந்தது. ஆம் சுதந்திர தேவி இருக்கும் தீவுக்குச் செல்ல காத்திருக்கும் கூட்டம் தான் அது. என்ன ஏது என்று விசாரித்து விட்டு பெரும் வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். அப்போது என்னுடன் மதுரை ஹனிவெல்லில் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டு அமெரிக்கா வந்திருக்கும் ஆனந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பயணப்பட ஆயத்தமாயிருந்த ஆனந்த்திடம் ஒரு சில வார்த்தை விசாரிப்பு, பரிமாற்றங்கள் செய்தோம். அருகிலுருக்கும் மதுரையில் கிடைக்காத சந்திப்பு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கிடைத்த சந்திப்பை பரவசமாய்த் தான் இருந்தது.
பயணச்சீட்டு வாங்கக் காத்திருக்கும் நீள் வரிசையில் வெவ்வேறு நாட்டு மக்கள் கலந்து இருந்தனர். நமது நாட்டின் சுற்றுலாத்தளங்களில் தெலுங்கு, மலையாள, கன்னட, ஹிந்தி ஆட்களைப் போல சீன, பிரிட்டானிய, ஜப்பானிய, ஐரோப்பிய மக்கள் வரிசையாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். பொறுமையுடன் நகர்ந்து செல்லும் மக்களை குஷிப்படுத்துவதற்காக பிச்சை எடுப்பது போன்ற முறையில் நகைச்சுவையாகப் பேசுவது, நாட்டின் தேசீய கீத்ததைப் பாடுவது போன்ற பொழுதுபோக்குக்களை சிலர் நடத்திக்கொண்டிருந்தனர். நம்மூரில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுப்பது போல அங்கே ஒரு டாலர், இரண்டு டாலர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாம் தான் ஒவ்வொண்ணுக்கும் கணக்குப் பார்ப்போமே.. ஒரு டாலர் போட்டாலும் கூட இந்திய ரூபாய்க்கு மதிப்பான 43 ரூபாயையா பிச்சையாகப் போடுவது ? என நினைத்துக் கொண்டோம்.
வெகு நீண்ட வரிசைகளைக் கடந்து விமானப் பயணத்திற்கு இணையான சோதனைகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த போட்டில் ஏறி பயணமானோம். போட் மெல்ல மெல்ல நியூயார்க் நகரை விட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஈரமான தென்றல் காற்று பல மடங்கு வேகத்தில் அறைந்து கொண்டிருந்தது.
போட் நியூயார்க நகரை விட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்த போது நியூயார்க் நகரத்தின் கட்டிடங்களின் அமைப்பு ஒரு சொர்க்கத்தைப் போன்றே காட்சியளித்தது. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் போட்டின் அழகும், மெல்ல மெல்ல தன் அழகை பிரதானப் படுத்திக் கொண்டிருக்கும் நியூயார்க் நகர கட்டிடங்களும், ஒங்கி உயர்ந்ததாய் கைகளில் தீபம் வைத்துக் கொண்டிருக்கும் சுதந்திர தேவியின் சிலையும், அதன் அழகும், நியூயார்க் நகர கட்டிடங்களுக்கு இணையாக வீற்றிருக்கும் நியூஜெர்ஸி நகர அழகுமாய் கண்கொள்ளா காட்சியாய் அத்தருணங்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
- தொடரும்
மறுமொழிகள்
0 comments to "சுதந்திர தேவி சிலை - அமெரிக்காவில் (7)"
Post a Comment